ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி விட்டதாகவும், கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், அதிமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோபி மொடச்சூர் சாலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊழல் முறைகேடு, கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் “திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சரியில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே கள்ளச்சாராயம் பெருகிக் கொண்டுள்ளது. அதனால் 21 மரணங்கள் ஏற்பட்டுள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் கொண்டு வர முடியவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் எந்த தீய சக்திகளும் நடமாட முடியவில்லை. அதிமுகவை பொறுத்தவரை இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்டு வர வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இரண்டு கோடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக என்ற வரலாற்றை படைப்போம். அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்பதை எவராலும் தவிர்க்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைவதையும் எவராலும் தவிர்க்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பிறகுதான் திமுக விழித்திருக்கிறார்கள். திமுக அரசுக்கு நம்மைப் போன்றவர்கள் கோஷம் போட்டால்தான் விடிகிறது. இல்லை என்றால் விடிவு இல்லை” எனப் பேசினார்.