பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..!

கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி துவக்கம் முதல் கடந்த ஆண்டு வரை படித்து முடித்த பல மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் செயலர் அருட்திரு. R.D.E.ஜெரோம் மற்றும் கல்லூரியின் முதல்வர் பீட்டர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிஷோர் குமார், கற்பகம், ஆண்டனி மெடில்டா, அலியாஸ்கர் குரு, ஆண்டனி ஞானப்பிரகாசம் என முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இணைந்து ஒருங்கிணைப்பு செய்த இந்த நிகழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு குறித்து கல்லூரியின் செயலர் அருட்தந்தை பேசுகையில்,
நமது பிஷப் அம்புரோஸ் கல்லூரி கோவை கத்தோலிக்க கிறிஸ்துவ மறைமாவட்டத்துக்கு உட்பட்டு கடந்த 1997ம் ஆண்டு முதல் சிறப்பான முறையில் செயல்பாட்டு வருகிறது. அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக 2022ம் ஆண்டு தேசிய நிர்ணய தரச்சான்றிதழ் பெற்றதோடு இந்த ஆண்டு முதல் தன்னாட்சி அங்கீகாரமும் பெற்றுள்ளது. ஒழுக்கத்துடன் கூடிய இந்த காலத்திற்கு ஏற்ற நவீன பட்டப்படிப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் நமது கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு விழா இன்று நடைபெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சி . இதன் தொடர்ச்சியாக இனி வரும் காலங்களில் முன்னாள் மாணவர்களை இணைத்து தொழில் வாய்ப்பு, மேம்பாடு, பயிற்சி வகுப்புகள், வேலைவாய்ப்பு என பல வாய்புகளை உருவாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவும் அன்போடு அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் கிஷோர் குமார் பேசுகையில், நமது பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் இன்று வங்கிகளில் உயரிய பதவிகளிலும், கல்லூரியில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகவும் , பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிந்தும், சொந்தமாக தொழில் செய்தும் வருகின்றனர். இவர்களுடன் ஒருங்கிணைந்து இன்றைய வளரும் தலைமுறையினருக்கு பல்வேறு வாய்புகளை முன்னெடுக்க கல்லூரியுடன் இணைந்து முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.