டெல்லி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் “முதிர்ச்சியை” காட்டினர் என்றும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் தீவிரவாதிகள் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதல் சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கருத்துகளைக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
புனே அருகே உள்ள சஸ்வாட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “அரசியல் ரீதியாக பழி சுமத்துவதற்குப் பதிலாக குடிமக்களிடையே நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இப்போது முன்னுரிமையாக இருக்கவேண்டும். இதுபோன்ற தருணங்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒற்றுமையைக் கோருகின்றன.
காஷ்மீர் முழுவதும் உள்ள மக்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பஹல்காம் தாக்குதலைக் கண்டித்தது, இந்தியாவின் ஒற்றுமைக்கான தங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாகும். பெரும்பாலான முஸ்லீம் மக்கள் இந்த தாக்குதலைக் கண்டித்து வீதிகளில் இறங்கினர்.
ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி விவாதிக்க மத்திய அரசு சமீபத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதில் மக்களவையில் எங்கள் கட்சி சார்பாக சுப்ரியா சுலே கலந்து கொண்டார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து முக்கியமாக விவாதங்கள் நடந்தன.
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உட்பட முக்கியத் தலைவர்கள் தங்கள் தரப்பில் ஒரு குறைபாடு இருந்ததை ஒப்புக்கொண்டதன் மூலம் முதிர்ச்சியைக் காட்டியதில் நான் திருப்தி அடைகிறேன். அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டாலும், இந்த கட்டத்தில் குறைபாடுகளைப் பற்றி விவாதிப்பதில் இப்போது கவனம் செலுத்தக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.