டெல்லி: குஜராத் துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் அடுத்தடுத்து பிடிபட்டு அதிர வைத்துக் கொண்டிருந்தன.
தற்போது அந்தமான் கடற்பரப்பில் 6,000 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளுடன் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவுக்குள் இந்த போதைப் பொருட்களை கடத்துவதற்குதான் 6 பேரும் திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருளுடன் தொடர்ந்து பலர் கைது செய்யப்படுகின்றனர். இந்தியாவுக்குள் போதைப் பொருள் கடத்தக் கூடிய நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம்தான் இருந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாகவும் வெளிநாடுகளில் இருந்து துறைமுகங்கள் வழியாகவும் குஜராத்துக்குள் போதைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் அவை கடத்தப்படுகின்றன.
இந்த நிலையில் அந்தமான் கடற்பரப்பில் சந்தேகத்துக்குரிய மீன்பிடி படகு ஒன்றை கடலோர காவல்படை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். அப்போது மீன்பிடி படகில் ஆயிரக்கணக்கான பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த பாக்கெட்டுகளை சோதனையிட்ட போது போதைப் பொருள் எனவும் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது 1,000 பாக்கெட்டுகளில் இந்த போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தனர் கடத்தல்காரர்கள். அந்த படகில் இருந்து மொத்தம் 6,000 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் சிக்கியது. இதனையடுத்து மீன்பிடி படகில் இருந்த 6 மியான்மர் நாட்டினரும் கைது செய்யப்பட்டனர்.
மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளை இந்தியாவுக்குள் கடத்துவதற்காக மீன்பிடி படகில் காத்திருந்தனரா? அல்லது அந்தமான் வழியாக வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளை வைத்திருந்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.