திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ராஜசேகரின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சகோதரியும், ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து மாநிலம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஒய்.எஸ்.ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்தால் காங்கிரஸ் மேலும் வலுப்பெறும் என்பதால் தொடர்ந்து டி.கே.சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஷர்மிளாவும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு 2 முறை டி.கே.சிவகுமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் குடும்ப நண்பர் என்பதால் சந்திப்பு நடந்ததாக ஷர்மிளா தெரிவித்தார்.
இந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான கே.வி.பி.ராமச்சந்திரராவ் மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடர்ந்து ஒய்எஸ் ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சியில் சேரும்படி கூறி பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதையடுத்து, ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்கவும், வரும் தேர்தலில் பாலேருவில் இருந்து ஷர்மிளா போட்டியிடவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் நிகழ்ச்சியும் நடக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.