தமிழகத்தில் தள்ளிப்போகும் அண்ணாமலை பாதயாத்திரை – என்ன காரணம்..?

தி.மு.க., அரசின் ஊழல்களை வெளிப்படுத்துவதற்காக, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அடுத்த மாதம் மேற்கொள்ள இருந்த பாதயாத்திரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அக்கட்சியினர் கூறியதாவது: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின், தி.மு.க., அரசின் தவறுகளை, அமைச்சர்களின் ஊழல்களை, ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறார்.
இதையடுத்து, ‘தி.மு.க., பைல்ஸ் பார்ட் – 2’ என்ற பெயரில், பாதயாத்திரையின் போது, அடுத்த கட்ட ஊழல் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளார்.கோவில் நகரமான ராமேஸ்வரத்தில் இருந்து, ஜூலை, 9ல் பாதயாத்திரை துவங்க திட்டமிடப்பட்டடு இருந்தது. தி.மு.க., அரசு, அதை தடுக்க திட்டம் போட்டது. இந்த தகவல்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, உளவுத் துறை வாயிலாக சென்றது. இதனால், பாதயாத்திரையை ஜூலை இறுதிக்கு தள்ளி வைக்க உத்தரவிட்டிருக்கும் அமித் ஷா, தானே முன்னின்று துவக்கி வைக்க போவதாக கூறியுள்ளார்.மேலும், பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், லட்சம் பேரை வரவழைத்து, பொதுக்கூட்டம் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அமித் ஷா வருவதால், தமிழக அரசு தரப்பில் இடைஞ்சல் இருக்காது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.நெல்லையில் முடியும் முதல் கட்டம்ராமேஸ்வரத்தில் துவங்கும் பாத யாத்திரை, தெற்கு நோக்கி கன்னியாகுமரி வரை சென்று, 28 நாட்களில் திருநெல்வேலியை அடையும். அத்துடன் பாத யாத்திரையின் முதல் கட்டம் முடிவுக்கு வரும். இதில், 43 சட்டசபை தொகுதிகள் இடம் பெறும். சில நாட்கள் இடைவெளிக்கு பின், 2ம் கட்ட பாத யாத்திரை துவங்கும். இப்படி 100 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்