சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் இன்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தனி அணியை உருவாக்கிப் போட்டியிட்டதுடன், ஒருசில இடங்களில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது பாஜக. தொடர்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அண்ணாமலை, சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள இன்று லண்டன் செல்கிறார். 3 மாத காலம் லண்டனில் தங்கியிருந்து, அங்குள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் குறித்து அண்ணாமலை படிக்க உள்ளார். அண்ணாமலை லண்டன் சென்றால், தமிழக பாஜகவில் மாநில தலைவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், இது தொடர்பாக டெல்லி தலைமையும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அண்ணாமலையை மாற்றாமல், அவர் லண்டனில் இருந்தபடியே கட்சி பணிகளை கவனிக்க உள்ளதாக தெரிகிறது. அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியில் இருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் படிப்பை தொடர உள்ளார். அண்ணாமலை லண்டன் சென்றாலும், அங்கிருந்தபடியே, கட்சி விவகாரங்களை கவனித்துக் கொள்ள இருக்கிறார். மேலும், 2026-ல் சட்டப்பேரவை தேர்தலிலும், அண்ணாமலை தான் தலைவராக தொடர்வார் என்றும், தேசிய தலைமையும் அதைத்தான் விரும்புவதாகவும் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேசமயம் கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளை வழக்கம்போல, பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் கவனித்துக் கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மூத்த நிர்வாகிகள், அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாத இந்த 3 மாதங்களில் காணொலி வாயிலாக அவருடன் கலந்து ஆலோசித்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு இங்கிலாந்து செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றாலும், என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். இந்த அரசியல் சண்டை தொடரும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி நாங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பாஜக தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம்.” என்று அண்ணாமலை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு பூங்கொத்துகள் வழங்கி அண்ணாமலையை வழியனுப்பி வைத்தனர். இதுஒருபுறம் இருக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் 17நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேறு இரவு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். இன்று அமெரிக்கா செல்லும் அவர், செப்டம்பர் 12ஆம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதற்கட்டமாக சான் பிரான்சிஸ்கோவில் நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் நாளை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்..