காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மோசடி வழக்கு பதிவு..
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார்.
காரமடை ஒன்றியத்தில் உள்ள மருதூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பூர்ணிமா ரங்கராஜன்(40) என்பவர் இருந்து வருகிறார்.இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே இருந்து வருகின்றன. இந்த நிலையில் இவர் மீது கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதில் கடந்த 2019 ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் தற்போது வரை மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.இவர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ.49,51,003 இழப்பீடு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர்கள், இறந்தவர்கள்,அரசு ஊழியர்கள்,வார்டு உறுப்பினர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் பெயர்களில் தவறாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஜாப் கார்டு கிரியேட் செய்து அதிலிருந்து வரும் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதே போல் இதில் மோசடியாக தங்களது பெயரில் ஜாப் கார்டு போடப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தினை திருப்பி அளிப்பதாக 14 பேர் உறுதியளித்து உள்ளனர். இதே போல் தகுதி இல்லாத நபர்களின் பெயர்களில் ஜாப் கார்டு தயார் செய்து அதன் மூலமாக ரூ.5,02,432 பணத்தை கடந்த 2020 – 21 ஆம் ஆண்டிலும்,2021- 2022 ஆண்டில் ரூ.2,25,448 என மொத்தமாக ரூ.7,27,980ரூபாயும் மோசடி செய்துள்ளார்.
இதே போல் மருதூர் ஊராட்சியில் மொத்தமாக மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1878 ஜாப் காடுகள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 319 கார்டுகள் தகுதி இல்லாத நபர்கள் அதாவது தனியார் நிறுவன ஊழியர்கள், நில உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அரசுக்கு மொத்தமாக இழப்பு ரூ.49,51,003/-.இது தண்டனைக்குரிய குற்றம்.எனவே,அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்,இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது மாவட்ட ஆட்சியரிடமும்,காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வரும் மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன்.