சிங்காநல்லூர் சப்- ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – ரூ.1.50 லட்சம் சிக்கியது.!!

கோவை சிங்காநல்லூர் சார் – பதிவாளர் அலுவலகம் வெள்ளலூரில் உள்ளது. இங்கு சார் -பதிவாளராக நான்சி நித்யா கரோலின் பணியாற்றி வருகிறார்.இங்கு பத்திரங்கள் பதிவு செய்ய லஞ்சம் வாங்கப்படுவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திவ்யா தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மாலை 5:30 மணி அளவில் வெள்ளலூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். போலீசார் உள்ளே சென்றதும் பத்திரப்பதிவு அலுவலக வாயில் கதவுகளை அடைத்தனர். மேலும் அங்கிருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. இதே போல வெளியில் இருந்து யாரையும் உள்ளே வரவும் அனுமதிக்கவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு மேஜை ,பீரோக்கள், குப்பை கூடைகள் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர். அங்கு பணிபுரியும் ஊழியர்களின் கைப்பைகளையும், கழிப்பறை, மற்றும் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களின் பைகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் சோதனை செய்தனர் . அப்போது தனியார் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணிபுரியும் கீர்த்தி சங்கர் என்பவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,லட்சத்து 50ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை அவர் எதற்காக எடுத்து வந்தார் ?யாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தத் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..