திண்டுக்கல் ஆர்.எம் புரம் முதலாவது தெருவில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சிகள் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் காலை முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது.
இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஆணையாக பணியாற்றியபோது இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையர் மகேஸ்வரி பதவி ஏற்று மூன்று மாதங்களில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக பல்வேறு டெண்டர் விடுவதில் முறைகேடு செய்திருப்பதாக புகார்கள் பறந்துள்ளது.
இது குறித்து மேலிடத்துக்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார்கள் பறந்த நிலையில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக இருந்த பொழுதும் இவர் மீது புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்தும் புகார்கள் சென்றதின் அடிப்படையில் திடீரென திண்டுக்கல் மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சென்ற பிறகும் வழக்கமான பாணியில் தன்னுடைய பணிகளை மேற்கொண்ட நிலையில், இப்போது சோதனைக்குள்ளாகியுள்ளார்.
இருப்பினும் எந்தெந்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சோதனையின் முடிவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மகேஸ்வரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தெரிய வாய்ப்புள்ளது. மாநகராட்சி ஆணையர் என்பதால் டெண்டர் முதல் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கும் அதிகாரம் அவரிடம் இருக்கிறது. அவரின் கையெழுத்து இல்லாமல் மாநகராட்சியில் முக்கியமான பணிகள் மேற்கொள்ள முடியாது.
இதனிடையே அரசு அதிகாரி வீட்டிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையில் இறங்கியிருப்பது, விதிமுறைகளை மீறும் அல்லது கையூட்டு பெறும் அதிகாரிகளுக்கு இந்த சோதனை ஒரு எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.