பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று 16வது நாள் காரியம் நடைபெறுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழியாக அவரது 16வது நாள் காரியத்தன்று கொலை செய்ய உள்ளதாக ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சபதம் எடுத்திருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இதையடுத்து சென்னை முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இன்னொருபுறம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தலைவர் பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு மேற்கு வங்கத்தில் இருந்து மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதும், கட்சி பாகுபாடுகளால் ஈர்க்கப்பட்டு ஆம்ஸ்ட்ராங்குடன் நட்பாக பழகி, பின் காதலித்து பொற்கொடி திருமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்குப் பின்னர், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில நிர்வாகிகள் அவரிடம் கட்சி மாநில தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுத்த நிலையில், தற்போதுள்ள சூழலில் தான் கட்சி பதவியை ஏற்க விரும்பவில்லை என ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இதுவரை ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, திருனின்றவூர் பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி, தமிழ்மாநில காங்கிரஸ் இளைஞரணி துணைத் தலைவர் ஹரிஹரன், அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணைச் செயலாளர் மலர்கொடி, சதீஷ் ஆகிய 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரை தாக்க முயன்ற சம்பவத்தில் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார். நேற்றிரவு வடசென்னை பாஜக மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.