கோவை : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு நேற்று நடத்தப்பட்டது .கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 1,939 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 5 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக உக்கடம், காந்திபுரம்,சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பொள்ளாச்சி பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன்பாகவே தேர்வு மையத்துக்கு சென்றனர். அவர்கள் அனைவரையும் அங்கிருந்து அதிகாரிகள் சோதனை செய்த பின்னர் மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். பின்னர் தேர்வு தொடங்கியது காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்திலிருந்து தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் 1.221 பேர் எழுதினார்கள் .718 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில், 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், தாசில்தார் நிலையில் தலா ஒரு தேர்வுமைய ஆய்வு அதிகாரி /துணை தாசில்தார் நிலையில் 8 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 162 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்..