டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லியில் புதிய மதுபானக் கொள்கையை அரசு அறிமுகம் செய்தது. இந்த கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த புதிய மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லியின் துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதோடு 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலைகள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் புதிய மதுபான கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் எம்.எல்.சியுமான கவிதா மற்றும் 36 பேருக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டது. அவர்களுக்கும் சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கடந்த 23ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில்தான், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரை சிபிஐ கைது செய்துள்ளது. காலை அவர் விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு, மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மழுப்பலான பதில்களை அளித்து, அதற்கு நேர்மாறான ஆதாரங்களை எதிர்கொண்ட போதிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், மதியம் 12 மணியளவில் தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்ட உடனேயே, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கலால் ஊழலின் உண்மையான மன்னன் என்று குறிப்பிட்டது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அவர் தான் அடுத்த கைது என்றும் கூறி வருகிறது.
துணைநிலை ஆளுநர் வினை குமார் சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்ததன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெல்லி அரசு மீதான தாக்குதலை பாஜக படிப்படியாக முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கிடையில், சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இரு மூத்த அமைச்சர்கள் இல்லாதது ஆம் ஆத்மி மற்றும் டெல்லி அரசின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும், குறிப்பாக பட்ஜெட் கூட்டத்தொடர் சில நாட்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிசோடியா தனது இலாகாவில் 18 துறைகளுடன், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசாங்கத்திலும் கட்சியிலும் மிகவும் நம்பகமான உதவியாளர் ஆவார். அமலாக்க துறை விசாரித்து வரும் ஒரு வழக்கில் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஜெயின் கடந்த 9 மாதங்களாக திஹார் சிறையில் இருக்கிறார். இந்த மாதங்களில், அவர் கையாளும் முக்கிய துறைகளை சிசோடியா தான் கவனித்து வந்தார்.