சென்னை: “தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றம், பேரிடர் மீட்பு உட்பட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் கொடுக்காமல் வஞ்சித்து வருகிறது ஒன்றிய மோடி அரசு. நாம் கேட்பது ஒன்றிய அரசின் அப்பன் வீட்டுச் சொத்தை அல்ல, நம் தமிழ்நாட்டு மக்களின் உரிமையை. அதைக் கேட்டால் ஒருமையில் பேசுகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசின் காதில் விழும்படி மக்களின் குரலாக ஒலித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் டெல்லி முதலாளி மோடியின் பின்னால் ஒளிந்துகொண்டு திமிராக ஒருமையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை. நாக்பூரில் பாடம் கற்றவரிடம் நாகரிகம் எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், அண்ணாமலைக்கு துளியாவது தமிழ் மக்கள்மீது அக்கறை இருக்கும் என நினைத்தது தவறு என அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், துணை முதலமைச்சரை விமர்சிப்பது மக்களை விமர்சிப்பதற்குச் சமம் என்பது பாவம் அவருக்குத் தெரியவில்லை; பரிதாபம்! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதலமைச்சர் மீதான அண்ணாமலையின் இந்த விமர்சனத்தை இல்லையில்லை விசமத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எங்கே தனது டெல்லி முதலாளிகள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். இதனால்தான் தன்னுடைய முதலாளிகளைக் குளிர்விக்க, தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள, மத வெறுப்பு, தமிழ் மொழி, தமிழ் நிலம் சார்ந்த வெறுப்பைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்.
உரிமை பறிக்கப்படும்போது, கொஞ்சம் தட்டிக் கேட்க வேண்டியும் இருக்கிறது. இதை துணை முதலமைச்சரின் குரலிலேயே சொல்கிறோம், தமிழர்கள் நாம் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள்; எந்தக் காலத்திலும் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்; அடிபணிய மாட்டோம். தமிழக உரிமைகளைக் கேட்கும் எங்களின் குரல் போராட்டமாக மாறுவதும் மாறாமல் இருப்பதும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் கையில்தான் உள்ளது.
ஒன்றியப் பிரதமர் மோடி அவர்களே, சென்ற முறை நீங்கள் தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது தமிழ்நாட்டு மக்கள் “Go Back Modi” எனத் துரத்தி அடித்தார்கள். இந்த முறை மீண்டும் அதைத் தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால், “Go Back Modi” கிடையாது, “Get Out Modi” எனச் சொல்லி துரத்துவார்கள். என்பதை மீண்டும் ஒருமுறை அரசியல் கோமாளி அண்ணாமலைக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.” எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று கரூரில் நடந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு” என ஒருமையில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.