தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இவருடைய நூற்றாண்டு நினைவாக ரூ100 நாணயம் வெளியிடப்படுகிறது.
இந்நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள நிலையில் இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.இதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு வீடு தேடி சென்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உட்பட பல திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.