சென்னையில் உள்ள கிண்டி வா்த்தக மையத்தில் ‘மருத்துவத்தின் எதிா்காலம்’ என்ற கருப்பொருளில் கருணாநிதி நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்த மருத்துவ மாநாட்டை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகிறது. இந்நிலையில் அந்த மாநாட்டு முன்னேற்பாட்டு பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவரும், துணைவேந்தருமான கி.நாராயணசாமி கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சா்வதேச அளவில் புகழ்மிக்க மருத்துவா்கள், மருத்துவ இளநிலை, முதுநிலை, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். மேலும், தமிழகத்தின் 20,000 மேற்பட்ட மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதில், 11,000 பிரதிநிதிகள், 182 மருத்துவ துறை பேச்சாளர்கள் பன்னாட்டு மருத்துவ மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.