இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இடைக்கால நிவாரணமாக ஜூன் 1ஆம் தேதி வரையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட எதுவாக இந்த இடைக்கால நிவாரணம் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இடைக்கால ஜாமீன் காலத்தில் , டெல்லி முதல்வராக அலுவலகம் செல்லவோ, அதிகாரபூர்வ கோப்புகளில் கையெழுத்திடவோ கூடாது எனவும், வழக்கு குறித்து பேசவோ, வழக்கு தொடர்பானவர்களை சந்திக்கவோ கூடாது எனவும் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லி திகார் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், சர்வாதிகாரத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பேசினார். அதன் பிறகு வீடு திரும்பிய கெஜ்ரிவால் தாயிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.
இதனை தொடர்ந்து இன்று முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள கெஜ்ரிவால் இன்று மாலை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உடன் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதற்கிடையில், இன்று மதியம் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திக்க உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.