கோவை குனியமுத்தூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.
வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கடந்த 20 நாட்களாக தொடர் மழை பெய்ததால், குனியமுத்தூர் 87, 88 வது வார்டுகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது தாழ்வான பகுதி. எப்போது மழை பெய்தாலும், செங்குளம் நிறையும் போதும் இப்பகுதியில் தண்ணீர் நிறையும். இதனைத் தவிர்க்க இப்பகுதியில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பாதாள சாக்கடை டெண்டர் விட்டது. ஆனால் திமுக ஆட்சியர் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் மழைநீர் தேங்கியுள்ளது.
அதிமுக ஆட்சியில் மழை நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிப்புகளை பார்வையிடுவது குறித்து மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் ஒரு அதிகாரியும் வரவில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இனியாவது சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் ஆட்சி என்பதைப் பார்க்காமல் அதிகாரிகள் மக்களை பார்த்து வேலை செய்யுங்கள்.
கோவையில் எந்த சாலையிலும் நடக்க முடியவில்லை. எல்லா சாலைகளும் மோசமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்ட 500 சாலை பணிகளை இரத்து செய்துள்ளார்கள். இப்போது மாநகராட்சிக்கு வருமானம் அதிகமாக வருகிறது. வரிகளை உயர்த்தி உள்ளார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் இப்பணிகளை செய்ய நிதி இல்லை என சொல்லக்கூடாது. அதிகாரிகள் மக்களுக்கு வேலை செய்ய வேண்டும். சென்னையில் இதுவரை நாங்கள் செய்த வேலையை தவிர திமுக ஆட்சியில் வேறு எதுவும் செய்யவில்லை. இரத்து செய்யப்பட்ட டெண்டர் பணிகளை மீண்டும் செய்ய வேண்டும். அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். கோவை மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு தருகிறோம். சாலைப் பணிகளையும், மழை நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் இப்பணிகளை செய்யவில்லை எனில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதிமுக ஆட்சியில் திருச்சி சாலை, பாலக்காடு சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை விரிவுபடுத்தி சீரமைக்கப்பட்டது. நாங்கள் செய்த பணிகள் மக்களுக்கு தெரியும். தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் சொன்னது போல மக்கள் பாராட்டியதாக தெரியவில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. கூட்டணி கட்சிகளே வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள். சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்கள் குறைந்ததற்கு நாங்கள் செய்த பணிகளே காரணம். மழைநீர் வடிகால் நாங்கள் கட்டியது. திமுக ஆட்சியில் செய்யும் பணிகளுக்கு எந்த வங்கியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது என சொல்ல முடியுமா? எல்லாம் எங்களது ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள். லேசான மழைக்கே சென்னை தாங்கவில்லை. இந்த அரசு விளம்பரம் செய்வதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும். தொலைக்காட்சிகளில் நடிக்காமல் வேலை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்தார்.