கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று அதிகாலை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் செந்தில்குமாரை சவாரிக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் செந்தில்குமார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி ஆட்டோ டிரைவர் செந்தில்குமாரை அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்கினர். இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து செந்தில்குமாரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செந்தில்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குடிபோதையில் ஆட்டோ டிரைவரை தாக்கியது சிவகங்கை திருப்பத்தூரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் லட்சுமணன் (19) மற்றும் ராமன்(19) என்பதும் தெரியவந்தது. இவர்களில் லட்சுமணன் கோவையில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராகவும், ராமன் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.