திருப்பூர் – பல்லடம் ரோடு குங்குமபாளையம் பிரிவில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துதூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் முபாரக் ( வயது 50) உது மான் பாருக், சையது அப்துல் காசிம், கண்ணன், அப்துல் ரகுமான், தமி முன் அன்சாரி ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு லாரி மற்றும் 2 கார்கள், ரூ 5 கோடி மதிப்புள்ள 11.46டன் செம்மரக்கட்டைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைதான 6 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர் .இந்த வழக்கு விசாரணைகோவையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக முபாரக் உட்பட 6 பேரும் சரிவர கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தனர் .இதனால் அவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் பிடிவாண்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் முபாரக் கடந்த ஆண்டு ஒரு வழக்கில் பெரிய கடை வீதி போலீசாரால் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு சென்றார். இதை அறிந்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று பெரிய கடை வீதி போலீஸ் நிலையம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த கடத்தல் ஆசாமி முபாரக்கை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.