துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சட்டை அணியச் சொல்லுங்கள்- ஐகோர்ட்டில் மனு..!

மிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முறைப்படியான ஆடைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் சத்யகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையால் வெளியிடப்பட்ட 2019 ஜூன் 1-ஆம் தேதியிட்ட அரசு உத்தரவு எண் 67, அனைத்து அரசு ஊழியர்களும் நேர்த்தியான, சுத்தமான, முறைப்படியான உடைகளை உடுத்த வேண்டும் என்று கூறுகிறது. அரசாணையின்படி, ஆண் ஊழியர்கள் தமிழ் கலாசாரம் அல்லது இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முறைப்படியான உடைகள் (formal dress) பேண்ட் அல்லது வேஷ்டி உடுத்த வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், அனைத்து அரசு நிகழ்ச்சிகளில் டி – சர்ட் அணிந்து வருவதாகவும், தமிழ்நாடு தலைமைச் செயலத்தின் பரிந்துரைக்கப்பட்ட ஆடை வரன்முறையை அமைச்சர் அலுவலகத்திலும், துணை முதல்வர் அறையிலும் அவர் பின்பற்றாமல் இருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதியின் டி – சர்ட்களில் பெரும்பாலும் திமுகவின் சின்னம் இருக்கும் என்றும், மக்கள் பணியாளர் என்ற முறையில் அவர் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சின்னம் கொண்ட உடையை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

உதயநிதியின் செயல்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை, சட்ட விரோதமானவை, சட்டத்திற்கு புறம்பானவை மற்றும் அரசாணைக்கு எதிரானது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முறைப்படியான ஆடை வரன்முறையைக் கடைப்பிடிக்குமாறு உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.