சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்டு குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
2006-2011-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்தார் தங்கம் தென்னரசு. அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தங்கம் தென்னரசு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி அனைவரையும் விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதேபோல 2006-2011 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது. 2012ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து
கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் விசாரணை நீதிமன்றங்களின் இந்த விடுதலைத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தாமாக முன்வந்து (சூமோட்டா) விசாரணை நடத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றம் வரை இருவரும் சென்றனர். ஆனால் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை கிடைக்கவில்லை.
இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து அதிரடித் தீர்ப்பளித்தார்.
அத்துடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சாட்சிகளின் விசாரணையை தொடங்க வேண்டும்; இந்த விசாரணை நாள்தோறும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இருவரும் செப்டம்பர் 9-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.