அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெல்லிக்குளத்தைச் சேந்தவர் காளிகுமார். சரக்கு வாகன ஓட்டுனரான காளிகுமார் நேற்று முன்தினம் திருச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது சேத்தநாயக்கன்பட்டிவிளக்கு அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வாகனத்தை மறித்துள்ளனர். தொடர்ந்து காளிகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காளிகுமாரின் உறவினர்கள் நேற்று அருப்புக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்காக அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான 19 போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது போராட்டக்காரர்கள் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தினர். பெண் டிஎஸ்பியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நெல்லிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய முருகேசன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய பாலமுருகன், பொன்குமார், காளிமுத்து, சஞ்சய் குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா மற்றும் முருகேசன் ஆகிய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.