பேரூராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல்: கோவையில் சாலை மறியல
கோவை, சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி உட்பட்ட பாலு கார்டன் பகுதியில் சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் விட்ட பணிகளை கோவை வந்த போது அண்மையில் துவக்கி வைத்தார். இப்பணிகளுக்காக நில அளவைப் பணிகள் மேற்கொண்ட போது ஒரு குறிப்பிட்ட பகுதியை அளக்கும் போது அதை ஒட்டி உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து நில அளவை செய்த அதிகாரிகள் அளவு கல்லை நட்டு வைத்தனர். அதை அப்பகுதி தோட்டத்தினர் அகற்றியதாக வியாழக்கிழமை சூலூர் காவல் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக தங்களுக்கு மிரட்டல் விடுவதாக தோட்டத்து பகுதியை சேர்ந்தவர்களும் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வெள்ளிக்கிழமை காலை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பணியாளர்களுடன் அப்பகுதிக்கு வந்து ஜே.சி.பி இயந்திரத்துடன் சாலையை சமப்படுத்த முயன்ற போது பேரூராட்சி துணைத் தலைவர் சண்முகத்தை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து உடனடியாக பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தி.மு.க வினர் திருச்சி சாலையில் பேரூராட்சி துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல தோட்டத்து பகுதியினர் 90 வயது முதியவரை ஒரு அங்கு இருந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறி அவர்களும் திருச்சி சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அப்போதைக்கு விரைந்து வந்த சூலூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் திருச்சி சாலையில் போக்குவரத்தை சீர்படுத்தினர். பேரூராட்சி செயல் அலுவலர் புவனேஸ்வரி மற்றும் தலைவர் புஷ்பலதா, துணைத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து நில அளவீட்டுப் பணிகளை முடித்து தருமாறு கேட்டுக் கொண்டனர். தோட்டத்து பகுதியினர் தங்களுக்கு தகவல் தராமல் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். மேலும் இது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கூறினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டுள்ளது சூலூர் போலீசார் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.