கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை துணியால் மூடி தாக்கினர். இதில் நிலைகுலைந்த தேவராஜ் மயங்கினார். அப்போது அந்த இளம்பெண்கள் அவர் அணிந்து இருந்த தங்க மோதிரம், செயின் உள்பட 9 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் 2 பெண்களும் அங்கு இருந்து தப்பி சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த தேவராஜ் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து முதியவரை தாக்கி 9 பவுன் நகைகளை பறித்து சென்ற இளம்பெண்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பல்லடம் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 இளம்பெண் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்சதேகம் ஏற்பட்டது. 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த முதியவரிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து அவரை தாக்கி செயின் பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் , கோட்டூர் மலையாண்டிபட்டிணத்தை சேர்ந்த பவித்ரா தேவி (26), விஜயலட்சுமி (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.