ஆவடி: ஆவடியில் நடந்த முதலாவது புத்தகக் கண்காட்சியில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆவடி முதலாவது புத்தகக் கண்காட்சி, ஆவடி எச்.வி.எப் மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி துவங்கியது. இதனை பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட அரங்குகள் மற்றும் சுகாதாரம், சமூக நலன், சுற்றுலா, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் சார்பிலான அரங்குகள், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், ’ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி’ என்ற புகைப்படக் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சியில் பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு துறைகளின் பிரபலங்களான பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், பாரதிகிருஷ்ணகுமார், சுகி.சிவம், ஸ்டாலின் குணசேகரன், பேராசிரியர் பர்வின் சுல்தானா, மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்டோரின் கருத்துச் செறிவுடன் கூடிய உரை நடைபெற்றது.
இந்த புத்தகக் கண்காட்சிக்கு நாள் தோறும் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் வருகை தந்து, ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக, பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புத்தகங்களை கொள்முதல் செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினர். கடந்த 11 நாள்கள் நடந்த புத்தகக் காட்சியில் சுமார் 82 ஆயிரம் பேர் வருகை தந்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிறைவு நாளன்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு, புத்தக அரங்குகள் அமைப்பாளர்கள், 12 அரசு துறை கண்காட்சி அமைப்பாளர்கள் ஆகியோருக்கு நற்சான்று வழங்கி பாராட்டினர். நிகழ்வில் ஆவடி மாநகராட்சி ஆணையர் க.தர்ப்பகராஜ், துணை ஆணையாளர் விஜயகுமாரி, பொறியாளர் பி.வி.ரவிச்சந்திரன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், ஆவடி வட்டாச்சியர்கள் வெங்கடேஷ், மணிகண்டன், துப்புரவு அலுவலர்கள் ஆல்பர்ட் அருள்ராஜ், முகைதீன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.