வரும் ஜனவரியில் அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேகம் – வெளியான புதிய தகவல்..!

அயோத்தி ராமா் கோயிலின் கருவறை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்கு (தைப் பொங்கல்) பின்னா் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோடிக்கணக்கான ராமா் பக்தா்களின் கனவு விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 16-24 தேதிகளில் மகர சங்கராந்திக்குப் பின்னா், கோயில் கருவறையில் ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இரண்டு தளங்களைக் கொண்ட கோயிலின், முதல் தளத்தின் மேற்கூரை பணிகள் 80 சதவீதம் நிறைவுபெற்றுள்ளன. அந்தத் தளத்தின் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றதும், கும்பாபிஷேகம் நடைபெறும்.

கோயிலின் கட்டுமான பணிகள் தொடா்ந்து நடைபெற்றாலும், ராமரை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். நாட்டின் அனைத்து பாரம்பரியங்களையும் சோந்த மடாதிபதிகள், துறவிகள் இந்த நிகழ்வில் பங்கேற்பா் என்று அவா் கூறினாா். முன்னதாக, ஹரித்வாரில் உள்ள மடாதிபதிகள், துறவிகளைச் சந்தித்து, அயோத்தியில் நடைபெறும் ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்குமாறு அவா் அழைப்பு விடுத்தாா்..