கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி டேனியேல் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சுதாகர் (வயது 52).
இவரது ஆலயத்திற்கு வரும் குடும்பத்தினரின் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் பவனிக்காக செல்வது வழக்கம். அதற்காக காரை பயன்படுத்தி வந்தார். இவரது காரை ஓட்டுவதற்காக டிரைவர் வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார். அப்போது மணி என்பவர் சுதாகருக்கு போன் செய்து கார் டிரைவர் வேலைக்கு வருவதாக கேட்டு நேரில் வந்தார். அவரக்கு சுதாகர் வேலை கொடுத்தார். முதல் அந்த நபர் வழக்கம் போல காரை ஓட்டியுள்ளார். 2-வது நாள் கிறிஸ்துமஸ் பவனிக்காக செல்ல வேண்டும் என அந்த நபரிடம் கூறியுள்ளார். அந்த நபரும் சாதாரணமாக கார் ஓட்டி சென்றார்.
போதகர் சுதாகர் குழுவினர் ராக்கிபாளையம் மேசியா கார்டன் அருகே உள்ள விநாயகா நகரில் ஒருவர் வீட்டுக்கு பவனிக்காக சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து போதகர் சுதாகர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது காரை காணவில்லை. உடனே சுதாகர் டிரைவர் மணிக்கு போன் செய்த போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.