ரூ.17 கோடி மதிப்புள்ள 26 கிலோ அடகு நகையுடன் ஓட்டம் பிடித்த வங்கி மேலாளர் தெலுங்கானாவில் சிக்கினார்.!!

பாலக்காடு: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி, ‘பாங்க் ஆப் மஹாராஷ்டிரா’வில் மேலாளராக பணிபுரிந்தார்.எர்ணாகுளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கு பொறுப்பேற்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த வங்கி உயர் அதிகாரிகள், வடகரை எடோடி கிளை வங்கியில் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு மாதங்களில், 42 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த, 26 கிலோ எடை, 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளுடன் ஜெயக்குமார் தலைமறைவானதும், அந்த நகைகளுக்கு பதில், போலி நகைகளை லாக்கரில் வைத்ததும் தெரியவந்தது.  வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், தெலுங்கானாவில் அடிதடி வழக்கில் போலீசாரிடம் ஜெயக்குமார் சிக்கினார். போலீசார் விசாரணையில், கேரளா போலீசார் தேடி வரும் வங்கி மேலாளர் இவர் தான் என்பது தெரிந்தது.
தெலுங்கானா போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில், கேரளா போலீசார் அவரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரை, கேரளாவுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினால் மட்டுமே, இந்த வழக்கின் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தெரிய வரும்.இவ்வாறு கூறினர். முகநுாலில் விளக்கம் இதற்கிடையே, ‘நான் தலைமறைவாக செல்லவில்லை; விடுமுறையில் தான் சென்றுள்ளேன். அந்த நகைகளை அடகு வைத்தது தனியார் பண பரிவர்த்தனை நிறுவனம். மண்டல மேலாளர் வற்புறுத்தலால் தான், கடன் வழங்கப்பட்டது’ என, முகநுால் வாயிலாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.