கல்விக் கடனை திருப்பி செலுத்த கோரி வங்கி அதிகாரிகள் மிரட்டல்- கோவை என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை..!

கோவை வடவள்ளி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வீர பாண்டி. இவரது மகன் கலைச் செல்வன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து முடித்தார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் கலைச் செல்வனுக்கு வேலை கிடைக்க வில்லை.இதன் காரணமாக அவர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். கடந்த 30-ந் தேதி வங்கியில் இருந்து கலைச் செல்வனின் வீட்டிற்கு வந்தவர்கள் 31-ந் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டி விட்டு சென்றார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
31-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த கலைச் செல்வன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். மாலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அவரது பெற்றோர் தங்களது மகன் விஷம் குடித்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தங்களது மகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கலைச் செல்வனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.