உஷார்!! ஐஃபோன்களில் புதிய ஸ்பைவேர் தாக்குதல் – ஆப்பிள் எச்சரிக்கை.!!

இந்தியாவிலும், உலகின் 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐஃபோன் பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு ஏப்ரல் 11ஆம் தேதி 12 மணியளவில், புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கைத் தகவலை அந்நிறுவனம் அனுப்பியிருக்கிறது.

இது என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானதாக இருக்கும் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும், ஐஃபோனில் ஊடுருவல் முயற்சிகள் ஏதேனும் நிகழும் போது, ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற எச்சரிக்கைத் தகவல்களை அனுப்பியிருக்கிறது. அதன் அடிப்படையில் தற்போதும் அனுப்பியிருக்கிறது.

இன்று 92 நாடுகளைச் சேர்ந்த ஆப்பிள் பயனாளர்களுக்கு இந்த எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் 150 நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கும் இந்த தகவல் அனுப்பி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆப்பிள் ஐடியில் இணைக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் குறுந்தகவல் என இரண்டிலும் இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தகவல் சரியாக எத்தனை பேருக்கு வந்திருக்கிறது என்பது குறித்த தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.

உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐஃபோனை தொலைதூரத்தில்இருந்தே ஊடுருவ முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறிவைக்கப்படுவதை ஆப்பிள் கண்டறிந்துள்ளது. நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் குறிப்பாக உங்களை குறிவைத்திருக்கலாம்,” என்று ஐஃபோன் பயனர்கள் பெற்றுள்ள எச்சரிக்கை மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் எங்கிருந்து நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்த தகவலைக் கொடுக்க ஆப்பிள் மறுத்துவிட்டது.