கோவை:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை காமராஜர் ரோடு வேதத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 75). இவரது குலதெய்வ கோவிலான மாசணி அம்மன் கோவில் காரமடை எடுத்த திம்மம்பாளையத்தில் உள்ளது.
இந்த கோவில் திறந்த வெளியில் மேடை அமைத்து திம்மம்பாளையம் முதல் கேரள மாநிலம் அட்டப்பாடி வரை உள்ள 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த கோவில் இருந்து வருகிறது. கோவிலுக்கு காரமடை சுற்று வட்டார பகுதிகளான திம்மம்பாளையம் வெள்ளியங்காடு புங்கம்பாளையம், உட்பட 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கோவிலில் உள்ள தகர ஓடு மற்றும் மணி, இலைகள், வேல் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் கோவிலை சேதம் செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை விரைவில் கைது செய்வதாக கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.