கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செல்போன் பயிற்சியாளராக வேலை செய்து வரும் தன்னைவிட வயது குறைந்த சயத் யூசுப் (33) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
அப்போது சயத் யூசுப் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. அதன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய சயத் யூசுப் மறுத்து விட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று சயத் யூசுப் வீட்டுக்கு சென்ற அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தி உள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சயத் யூசுப், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார். மேலும் அவரது செல்போனை பிடுங்கி எறிந்து உடைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரும்புக்கடை சாரமேடு பாத்திமா நகரை சேர்ந்த சயத் யூசுப்பை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரது தாயார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.