“ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் அழகுபடுத்திய குளங்கள்..!

குளக்கரையில் குவிந்து கிடந்த குப்பைகள் : நவீன இயந்திரங்கள் கொண்டு நடைபெறும் தூய்மை பணிகள் …

குளு, குளு கோவையில் பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது பூங்காக்களும், தியேட்டர்களும் தான். இதனால் விடுமுறை காலங்களில் பூங்காக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் பூங்காக்களில் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக கோவையில் உள்ள குளக்கரைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் உக்கடம், வாலாங்குளம் ஆகிய குளத்தில் மாலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்கலாம். குறிப்பாக உக்கடம் குளக்கரையில் செல்பி ஸ்டார்ட் அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு ஏராளமானோர் திரண்டு செல்பி எடுத்து மகிழ்வதும் உண்டு. இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதால் இந்த குளக்கரையை பார்க்கவே அழகாக இருக்கிறது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்றாலே இந்தக் குளக்கரையில் உள்ள பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து குவிந்து குளத்தின் அழகை ரசிப்பதுடன், பொழுதைப் போக்கிவிட்டு செல்கின்றனர். பொதுமக்கள் அதிகமாக வந்து கூடும் இங்கு குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் தற்போது வந்து உள்ள நவீன இயந்திரங்களான நடைபாதையில் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்டவை அகற்றும் இயந்திரம், தண்ணீரை பீய்ச்சி அடித்து தரையை சுத்தம் செய்யும் இயந்திரம் போன்றவற்றை பயன்படுத்தி அங்குள்ள குப்பை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.