புதுச்சேரி: புதுவையில் என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கிறது . சட்டமன்ற தேர்தலில் புதுவையில் ஆறு சுயேட்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர் . இதில் சுயேட்சையாக போட்டியிட்டு ஏனாம் பிராந்தியத்தில் வெற்றி பெற்ற கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் திருபுவனை தொகுதி அங்காளன் உழவர் கரை தொகுதி சிவசங்கர் ஆகியோர் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் கூட்டம் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாரதிய ஜனதா ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் மூன்று பேரும் தங்கள் தொகுதியில் திட்டமிட்டு அரசால் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். அவர்களுக்கு ஆதரவாக பாரத ஜனதா எம்எல்ஏக்களும் புகார் தெரிவித்தனர். மேலும் பாரதிய ஜனதா எம் எல் ஏ கல்யாண சுந்தரம் புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். திருபுவனை தொகுதி பாரதிய ஜனதா ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் தன் தொகுதியில் அரங்காவலர் குழு நிர்வாகிகளை கூட நியமிக்க முடியவில்லை என குற்றம் சாட்டி சமீபத்தில் சட்டசபை நுழைவு வாயில் படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தார் . அவருக்கு பாரதிய ஜனதா எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆதரவும் தெரிவித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அமைச்சர் நமச்சிவாயம் தலையிட்டு சமாதானப்படுத்தியதை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இன்று ஏணாம் பிராந்தியத்தை சேர்ந்த பாரதிய ஜனதா ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக் காலை 10:30 மணிக்கு திடீரென சட்டசபைக்கு வந்து நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் .அவரோடு ஆதரவாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தனது தொகுதியான ஏனாம் அரசால் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் முன்னாள் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ண ராவ் ஏனாம் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும் அவர் பரபரப்பு புகார் தெரிவித்தார். அப்போது சட்டமன்ற காவலர்கள் எம்எல்ஏ உடன் ஆதரவாளர்கள் உட்கார கூடாது என தெரிவித்தனர் அதை அடுத்து ஆதரவாளர்கள் அங்கிருந்து விலகினர் எம்எல்ஏ மட்டும் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். இதனிடையே சுயேட்சை எம்.எல்.ஏ சிவசங்கர் சட்டசபைக்கு வந்தார் .அவர் நியாயமான கோரிக்கைக்கு தான் ஆதரவு அளிப்பதாகவும் முதலமைச்சர் பிரச்சினைகளை தீர்ப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் தங்களை விட தோற்ற எம்.எல்.ஏவால் ஏனாம் எம்எல்ஏவுக்கு அதிக இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் சுமார் 11 மணியளவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்டசபைக்கு வந்தார் .அவர் உண்ணாவிரதம் இருந்த எம்எல்ஏவிடம் உண்ணாவிரதத்தை கைவிடும் படி கேட்டுக் கொண்டார் .மேலும் எம்எல்ஏக்கள் இங்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை என தெரிவித்தார் .ஆனால் எம் எல் ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தார். இதனால் சபாநாயகர் தனது அறைக்கு சென்று விட்டார். சட்டசபை செயலாளர் எம்எல்ஏவிடம் பலமுறை சமாதானம் பேசி சபாநாயகர் அறைக்கு அழைத்தார். இதை ஏற்க மறுத்து எம்எல்ஏ போராட்டத்தை தொடர்ந்தார் சட்டசபை காவலர்கள் நுழைவு வாயில்களை மூடினார் எம்எல்ஏவை சுற்றி அவரின் ஆதரவாளர்கள் இருப்பதற்கு தடை விதித்து அவர்களை வெளியேற அறிவுறுத்தினர் .இதனால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது..