தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட மாடுகள் மூலம் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் அமர்வு இந்த வழக்கை தொடர் விசாரணை மேற்கொண்டது. விசாரணையில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர் என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தொடர்பாக, தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.