வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ.க தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு முடிந்தது.
கூட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், வி.பி.துரைசாமி, துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில் பா.ஜ.க அண்ணாமலை பேசியதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ளன. இதில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற வேண்டும். அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியா ஓ.பன்னீர்செல்வமா என அவர்கள் பின்னால் சென்று கொண்டிருக்க முடியாது. அந்த அவசியமும் இல்லை. அ.தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதை மக்கள் விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு கணிசமாக வாக்குகளை பெற்றது போல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்” என கூறினார்.
மேலும், “பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. கட்சியின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் யாரும் நடந்துகொள்ள கூடாது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டை குறித்து தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மாமல்லபுரம் ஆகிய 3 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் மாபெரும் வரவேற்பை பெற பா.ஜ.க. நிர்வாகிகள் பங்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.