பாஜக தான் இந்தியாவுக்கு பெரிய ஆபத்து : மும்பை ராகுல் யாத்திரை நிறைவு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.!!

சென்னை: பாஜகவை விட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை என்று மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ ‘ யாத்திரை நேற்று மும்பை வந்தடைந்தது. இதையடுத்து, மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இதற்காக நேற்று காலை மும்பைக்கு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். பின்னர் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

எனது சகோதரர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்துள்ளேன். கன்னியாகுமரியில் அவரது இநதிய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி வைத்தேன். அவரது யாத்திரை மும்பையை அடைந்திருக்கிறது. விரைவில் டெல்லியை அடையும். இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும்.

ராகுல் செல்லும் இடமெல்லாம் திருவிழாவாகவே காட்சியளிக்கிறது. அப்படியான வரவேற்பையும் அன்பையும் மக்கள் வெளிப்படுத்துகின்றனர். இந்த யாத்திரையில் பாஜக அரசு மூலம் பல்வேறு இடர்பாடுகளை அவர் சந்தித்தார். என்னென்னவோ காரணங்களை கூறி அவரது யாத்திரைக்கு அனுமதி மறுத்தனர். இந்த தடைகளை மீறி ராகுல் தனது பயணத்தை துணிச்சலுடன் தொடர்ந்தார்.

அவருக்காக திரண்ட கூட்டம் பாஜகவை தூக்கமிழக்கச் செய்துவிட்டது. அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தனர். உச்ச நீதிமன்றத்தை அணுகி மீண்டும் எம்.பி.யானார். அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் முழங்கினார். இது ராகுல் காந்தி என்னும் ஒரு தனி மனிதனின் யாத்திரையோ, காங்கிரஸின் யாத்திரையோ அல்ல. இந்தியாவுக்கான யாத்திரை. இதனாலேயே இது பாரத் ஜோடா யாத்திரை எனப்பட்டது.

இந்தியாவின் தற்போதைய தேவை ஒற்றுமையே. மக்களை பிளவுபடுத்தும் பாஜக விரைவில் ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேற்றப்படும். கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுப் பயணம், பொய் பிரச்சாரம் ஆகிய 2 விஷயங்களை மட்டுமே இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார். அவரது பொய் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்துவதே நமது இலக்கு. இண்டியா கூட்டணியை நாம் அமைத்ததில் இருந்தே இந்தியா என்ற வார்த்தையை பாஜக பயன்படுத்துவதில்லை. இதற்கு பயமே காரணம்.

இண்டியா கூட்டணியினரை ஊழல்வாதிகள் என பிரதமர் கூறுகிறார். ஆனால், தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினரே ஊழல்வாதிகள் என நிரூபணமாகியுள்ளது. ரூ.8 ஆயிரம் கோடி அளவில் தேர்தல் பத்திரம் பெற்று பாஜக வெளிப்படையாகவே (ஒயிட் காலர்) ஊழல் செய்துள்ளது. இத்தகைய அரசின் பிரதமர் ஊழலை பற்றி பேசுகிறார்.

எங்களது தோல்வியையும், ஊழலையும் மறைக்க மக்களை திசை திருப்புவதாக பிரதமர் குற்றம்சாட்டுகிறார். நாங்கள் மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்தோமே தவிர, கவன ஈர்ப்புக்காக வரவில்லை. நாடு முழுவதும் பயணித்த ராகுல்காந்தி நமது இந்தியாவின் உணர்வுகளை அறிந்திருப்பார். இது பாஜகவால் அழிந்த இந்தியாவை மீட்பதற்கான ஒரு பயணம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

பாஜகவைவிட வேறொரு மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இருக்க முடியாது.அவர்களிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும் என உறுதியேற்க வேண்டும். பாஜகவை தோற்கடிப்பதே ராகுல் காந்தியின் இந்த யாத்திரையின் வெற்றியாக இருக்க முடியும். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பயணம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பின்மையை உள்ளடக்கிய அரசை உருவாக்கும் வகையில் டெல்லியை கைப்பற்றியே நிறைவடைய வேண்டும். இந்தியாவை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.