பாஜக-வினரின் தந்திரம் பலிக்காது – முதல்வர் சித்தராமையா பேச்சு..!

பெலகாவி : ”பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முதல்வராகக் கூடாது, ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது, பா.ஜ.,வின் சித்தாந்தம்.
அக்கட்சியினர் தந்திரம் பலிக்காது,” என, முதல்வர் சித்தராமையா பேசினார்.பெலகாவி, கோகாக்கின், கவுஜலகி கிராமத்தில் சங்கொல்லி ராயண்ணா உருவச்சிலையை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொல்லி ராயண்ணா, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் இன்னும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால், கித்துார் மீது ஆங்கிலேயர் கண் பதித்திருக்க முடியாது. நம்மவர்களே சங்கொல்லி ராயண்ணாவை, ஆங்கிலேயரிடம் பிடித்துக் கொடுத்தனர்.மேலும் சில காலம், அவர் இருந்திருந்தால் புரட்சி போராட்டம் நடத்தி, ஆங்கிலேயரை தண்ணீர் குடிக்க வைத்திருப்பார். ராயண்ணாவின் தேசப்பற்றை அனைவரும் அறியும் நோக்கில், அவர் பிறந்த இடமான சங்கொல்லியில் ராணுவ பள்ளி துவக்கி உள்ளோம்.ராணி சென்னம்மாவின் வலது கையாக இருந்தவர் ராயண்ணா. இவர் மிகவும் பராக்கிரமசாலி. ஆங்கிலேயர்கள், ராணி சென்னம்மாவின் ஆஸ்தானம் மீது தாக்குதல் நடந்தபோது, வெற்றி கிடைக்க காரணாக இருந்தவர். இரண்டாவது யுத்தத்தில் தோற்றாலும், ஆங்கிலேயரிடம் சிக்காமல் தப்பினார். தனிப்படை அமைத்து ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.

ராயண்ணா நீரில் நீந்தும்போது, அவரது கையில் ஆயுதம் இருக்காது. அப்போது அவரை கைது செய்வது எளிது என, ஆங்கிலேயருக்கு வழி கூறி, அவர் பிடிபட காரணமாக இருந்தது நம்மவரே.என்னை முதல்வர் பதவியில் இருந்து, கீழே இறக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் சதி செய்கின்றனர். மக்களின் ஆசி, என் மீது இருக்கும் வரை, கீழே இறக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முதல்வராகக் கூடாது, ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது, பா.ஜ.,வின் சித்தாந்தம். அக்கட்சியினர் தந்திரம் பலிக்காது.இவ்வாறு அவர்பேசினார்.