NLC-யை முற்றுகையிட்டு போராட்டம் – அன்புமணி கைது.!!

நெய்வேலி: ‘என்.எல்.சி நிறுவனத்தை நான் முற்றுகையிட வந்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் நடைபெறும்’ என பா.ம.க தலைவர் அன்புமணி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்புமணியை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீஸ் வாகனங்கள் மீது பா.ம.க.,வினர் கல்வீசி தாக்கினர்.கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அன்புமணி பேசியதாவது: தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது; என்எல்சி தற்போது தமிழகத்திற்கு தேவையில்லை. மண்ணையும், மக்களையும் அந்த நிர்வாகம் அழித்துக் கொண்டிருக்கிறது.
நிலத்தை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்நிறுவனம் கடலூர் மாவட்ட வளர்ச்சிக்கு உதவவில்லை, மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.5 கோடி கொடுத்தாலும் ஏற்க மாட்டோம்.கடலூர் ஸ்தம்பிக்கும்என்.எல்.சி இங்கிருந்து வெளியேற வேண்டும். கதிர்வரக் கூடிய விளை நிலத்தை நாசம் செய்து தான் கால்வாய் தோண்ட வேண்டுமா?

கடலூர் மண்ணை காப்பாற்ற வேண்டும் என பாமக போராடிக் கொண்டிருக்கிறது. நான் முற்றுகையிட வந்ததால், தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் நடைபெறும். சாலை மறியல் என்றால் பெயருக்கு போராட்டமாக இருக்காது, கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும்.இது தான் வளர்ச்சியா 300 கிராம சபை கூட்டத்தில் என்எல்சி நிலத்தை கையகப்படுத்த கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

300 கிராமங்கள் எதிர்ப்பு இருந்தும் போலீஸ் உதவியோடு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நெய்வேலியில் நிலத்தடி நீர் 800 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. அப்படியிருக்கையில் என்எல்சி கோடிக்கணக்கான லிட்டர் குடிநீரை ராட்சத குழாய்கள் மூலம் உறிந்து எடுக்கிறது.நிலத்தடி நீரை உறிஞ்சி நிலத்தை மலடாக்குவது தான் வளர்ச்சியா? தமிழகத்திற்கு வெறும் 400 மெகாவாட் மின்சாரத்தை தான் என்எல்சி தருகிறது.

அந்நிறுவனத்தை விரட்டினால் தமிழகம் ஒன்றும் இருளில் மூழ்கிப் போய்விடாது. மின்சாரம் தயாரிக்க பல மாற்று வழிகள் உள்ளன; ஆனால் சோற்றுக்கு மண் மட்டுமே வழி. இவ்வாறு அவர் பேசினார்.முற்றுகைஇதனை தொடர்ந்து, அன்புமணி மற்றும் பா.ம.க.,வினர் என்.எல்.சி., நிறுவனத்திற்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்திய போலீசார், அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அங்கிருந்து செல்ல அன்புமணி மறுத்துவிட்டார். இதனால், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அன்புமணியை போலீசார் கைது செய்தனர்.