நீலகிரி: கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதிமுக பிரமுகரும், அந்த கட்சியின் முன்னாள் வர்த்தக அணி செயலாளருமான சஜீவனின் வீட்டில் ரத்தம் படிந்த கோடாரி, துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கோடநாடு சம்பவம்: குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கோடநாடு மேலாளர் நடராஜ், சசிகலா, சசிகலா உறவினர் விவேக், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவரும், அதிமுக வர்த்தகர் அணி செயலாளருமாக இருந்த சஜூவனிடமும் பல முறை விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சஜீவன் தான் தற்போது ஒரு சிக்கலில் சிக்கி இருக்கிறார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வன விலங்கினை வேட்டையாடிய குற்ற வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு சகோதரர்களின் அண்ணனான சஜீவன் மற்றும் 5 பேர் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடியதாக வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் இந்தியாவிலேயே அதிகமான புலிகள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தை புலி, கரடி, அரியவகை சிங்கவால் குரங்கு, மான் இனங்கள் உட்பட தாவர உன்னிகள், மாமிச உண்ணிகள், அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி வனக்கோட்டத்திற்குட்பட்ட சில்வர் கிளவுட் தோட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடி சஜீவனுக்கு சொந்தமான குடியிருப்பில் பதுக்கி வைத்துள்ளதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் வனத்துறையினர் சஜீவனின் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்திய போது வீட்டில் வாசலில் புதைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை கண்டு பிடித்தனர். மேலும் சஜீவனின் தங்குமறையில் மேலும் ஒரு துப்பாக்கி, 11 தோட்டாக்கள், கத்திகள், ரத்தக்கறை படிந்த கோடாரி, டார்ச் லைட்டுகள் மற்றும் காற்று சுழல் துப்பாக்கி ஒன்று வனத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சஜீவனின் எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை நடத்திய போது, சஜீவன் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் சுப்பையா மற்றும் அவரது நண்பர்கள் துப்பாக்கியுடன் எஸ்டேட்டுக்கு வந்து வேட்டையாடுவது வழக்கம் என வாக்குமூலம் அளித்தார். மேலும் சஜீவனின் நண்பர்கள் பலர் அடிக்கடி இந்த எஸ்டேட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இந்த எஸ்டேட்டின் அருகில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வந்துள்ளது. இந்த வனவிலங்குகளை வேட்டையாடி அதன் கறியை சமைத்து உண்பதற்காக கள்ளத் துப்பாக்கிகள் இரண்டை சஜீவன் வாங்கி வைத்துள்ளது தெரிய வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சருகு மான் ஒன்றை துப்பாக்கியால் வேட்டையாடி அதன் கறியை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதேபோல் இரண்டு வாரங்களுக்கு முன்பு காட்டு மாடு ஒன்றை வேட்டையாடி அதன் கறியை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். அதன் எலும்புகளை சாக்கில் கட்டி எடுத்து சென்று அருகில் உள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது, இதனையடுத்து வனத்துறையினர் பைசல், சாபுஜாக்கோப், பரமன், ஸ்ரீகுமார், சுபைர் , சஜீவன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இரண்டு துப்பாக்கிகள், பத்துக்கும் மேற்பட்ட வெடிக்கப்படாத தோட்டாக்கள், விலங்குகளின் ரத்தக்கறை படிந்த கோடாரிகள், கத்திகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பைசல், சாபு ஜேக்கப், எஸ்டேட் மேலாளர் பரமன் ஆகிய மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் சஜீவன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள சஜீவன், ஸ்ரீகுமார் மற்றும் சுபைர் ஆகியோரை தேடும் பணியில் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.