இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று உருமாற்றமடைந்து கொண்டே இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிந்த டாக்டா் சௌமியா சுவாமிநாதன் கூறியிருந்தாா். அதனை உறுதிபடுத்தும் வகையில் ஜெ.என்.1 வகை தொற்று தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. கேரளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த நவம்பா் இறுதியில் எடுக்கப்பட்ட 56 மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில் ஏற்கெனவே சமூகத்தில் பரவியிருக்கும் எக்ஸ்பிபி வகை கொ ரோனா 24 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இருவருக்கு பிஏ.1 வகை பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், திருச்சி, மதுரை, கோவை, திருவள்ளுா் மாவட்டங்களைச் சோந்த நால்வருக்கு ஜெ.என்.1 வகை கொ ரோனா இருந்தது தெரியவந்தது. அவா்கள் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனா். இது குறித்து பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. கா்ப்பிணிகள், முதியோா், இணை நோயாளிகள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றாா் அவா். இதனிடையே, மரபணு பகுப்பாய்வுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட மேலும் 96 மாதிரிகளின் முடிவுகள் அடுத்த சில நாள்களில் வெளியாகும் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 26 மாதிரிகளின் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை. அதேபோன்று, மாநில பொது சுகாதாரத் துறையின் ஆய்வகத்தில் 70 மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் சில நாள்களில் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மற்றொருபுறம் வழக்கமான கரோனா பரிசோதனைகள் தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.