மகாராஷ்டிரா சிவசேனாவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவருகின்றன.
சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்குத் தேர்தல் கமிஷன் கட்சியின் பெயர், சின்னத்தை வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் கடந்த திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு முழுமையாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர். உத்தவ் தாக்கரே சார்பாக கபில் சிபல் தலைமையிலான வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். நேற்று பிற்பகல் மூன்று மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் கமிஷன் சிவசேனாவின் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கி உத்தரவிட்டிருப்பதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதோடு கட்சி அலுவலகங்கள், வங்கிக்கணக்குகள் பிடுங்கப்படாமல் சுப்ரீம் கோர்ட் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே சார்பாக ஆஜரான கபில் சிபல் கேட்டுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஐகோர்ட்டில் ஏற்கெனவே மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் கமிஷனில் ஏற்கெனவே ஷிண்டே அணி வெற்றி பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டி, தேர்தல் கமிஷன் உத்தரவுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டனர். உத்தவ் தாக்கரே அணி தொடர்ந்து தேர்தல் கமிஷன் கொடுத்திருக்கும் சின்னத்தில் செயல்படலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு உத்தவ் தாக்கரேவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.
இனி கட்சியின் சொத்துகளைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு உத்தவ் தள்ளப்பட்டிருக்கிறார். ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். கடந்த ஜூன் மாதம் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. சிவசேனாவிலிருந்து பிரிந்த எம்.எல்.ஏ-க்கள் அஸ்ஸாம் அழைத்துச் செல்லப்பட்டு, தங்கவைக்கப்பட்டனர். இதற்கான அனைத்து வசதிகளையும் பா.ஜ.க செய்து கொடுத்தது. மார்ச் 5-ம் தேதியிலிருந்து உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.