கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் 1:30 மணி அளவில் இ-மெயில் ( மின்னஞ்சல்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே விமான நிலை அதிகாரிகள் உஷார் அடைந்தனர். அவர்கள் விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக விமான நிலையத்தில் சரக்கு பார்சல்கள் ஏற்றுமிடங்கள், பயணிகள் வருகை, வெளியேறும் பகுதி உள்பட பல்வேறு முக்கியமான இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படை, மாநகர போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதியானது. விசாரணையில் கோவை மட்டுமின்றி சென்னை உட்பட நாடு முழுவதும் 40 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. கடந்த மே மாதமும் விமான நிலையங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..