கோயம்புத்தூரில் களைகட்டியது புத்தகத் திருவிழா- உற்சாகத்துடன் கலந்து கொண்ட மக்கள்.!!

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு எட்டாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது . கோவை கொடிசியா அரங்கத்தில் இந்த புத்தகத் திருவிழா இன்று துவங்கியது . கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை துவக்கி வைத்தார் . கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி , மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் , கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட நூலகத்துறை அதிகாரிகள் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து , அரங்குகளை பார்வையிட்டனர் . இந்த புத்தகத் திருவிழா 28 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது . இந்த நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது . இதில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 280க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. கோவை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்கள் புதிய புத்தகங்களை வெளிட்டுள்ளன. அதிகபட்சமாக எதிர் வெளியீடு 28 புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது. நாவல், சிறுகதை, கட்டுரைகள், சிறார் கதைகள், வரலாறு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோவை புத்தகத் திருவிழாவில் இளம் படைப்பாளர்களுக்கான விருதில் கவிதை நூலுக்காக இரா.பூபாலனுக்கும், புனைவு நூலுக்கு நா.கோகிலன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. முதல் நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். வார இறுதி நாட்களில் அதிக அளவிலான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவினை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாள் தோறும் கருத்தரங்கம், கவியரங்கம், பேச்சுப்போட்டி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கோவை புத்தகத் திருவிழாவில் கடந்த ஆண்டு 2 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றதாகவும், அதே போன்று இந்த ஆண்டும் விற்பனை நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் கடந்த முறை புத்தகங்கள் நன்கொடை மூலம் 2000 புத்தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டதாகவும்,அதே போன்று இந்த ஆண்டும் புத்தக நன்கொடை நடத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தார். பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும் திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த புத்தகத் திருவிழாவில் அனைத்து வயதினர்களுக்கான புத்தகங்களும் இடம்பெற உள்ளதாகவும் கூறிய அவர்கள், இந்தப் புத்தகத் திருவிழாவில் அதிக அளவிலான மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்தனர்.