கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 57) தொழில் அதிபர். இவருக்கு பீளமேடு பகுதியிலும் சொந்தமாக வீடு உள்ளது. அவர் நேற்று முன்தினம் வெள்ளக் கிணறில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பீளமேட்டில் உள்ள வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே அவரின் வெள்ளக் கிணறு வீட்டை சுத்தம் செய்ய வேலைக்கார பெண் வந்தார் . அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரமேஷுக்கு தகவல் கொடுத்தார். உடனே ரமேஷ் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோ திறக்கப்பட்டு துணிகள் கீழே கிடந்தன .ஆனால் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால் எதுவும் திருடப்படவில்லை. இது குறித்த புகாரின் பேரில் துடியலூர்போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் முகமூடி அணிந்தபடி ரமேசின் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதேபோன்று அதே பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளில் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.