கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள மூர்த்தி என்பவரின் 1200 சதுர அடி அரசு இல்லத்தை ஆக்கிரப்பு செய்ய உதவியதாக லோகநாதன் தாசில்தார் மணி, சேகர் ,சந்தோஷ் குமார்,ஸ்ரீதேவி உள்பட 6 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலமானது அரசால் கையகப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்த நிலமாகும். இந்த நிலத்துக்கு பட்டா மாறுதல் நடவடிக்கைகளை 3 மணி நேரத்துக்குள் முடித்துக் கொடுத்து அதற்கு லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதை யடுத்து சென்னையில் இந்த மோசடிக்கு துணை போன அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை நடத்தினர். நில அளவை ஆய்வாளர் லோகநாதன் வீடு சூலூர் பக்கம் உள்ள வடுகபாளையத்தில் உள்ளது . அந்த வீட்டில் லோகநாதனின் தாய் வசித்து வருகிறார். நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், கைப்பற்றப்பட்டது. அரசு நில அபகரிப்பு விவகாரத்தில் கோவை நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.