பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22 முதல் 24 வரை ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து இருதரப்புப் பயணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி கிரீஸுக்குச் செல்கிறார். 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா குடியரசுத் தலைவர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் வரும் ஆகஸ்ட் 22-24 வரை தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
2019-ம் பிறகு நடைபெறும் முதல் நேரடி பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும். இந்த உச்சி மாநாடு குழுக்களின் முன்னேற்ற செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யும் மற்றும் எதிர்கால செயல்பாடுகளை அடையாளம் காணவும் வாய்ப்பளிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜி ஜின்பிங் பங்கேற்பு
தொடர்ந்து, மாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘BRICS – Africa Outreach and BRICS Plus Dialogue’ என்ற சிறப்பு நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மோடி தனது பயணத்தின் போது, ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் மற்ற நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துகிறார். இந்த உச்சிமாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பு குறித்து தற்போது வரை தகவல் இல்லை.
தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்கு செல்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் 25-ம் தேதி கிரீஸுக்கு செல்கிறார். . 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸுக்குச் செல்வது இதுவே முதல்முறை என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இரு நாட்டு பிரதமர்களும் பல்வேறு துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும் மோடி இரு நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களுடனும், கிரேக்கத்தில் உள்ள இந்திய மக்களிடமும் உரையாற்றுகிறார்.