அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளார். இதனை சமாளிக்க இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட 10 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த அமைப்பு வேகமாக வளர உள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடக்கும் வகையில் இந்த கூட்டமைப்பு உருவாக உள்ளதாக ரஷ்யாவின் எக்ஸ்பர்ட் எகடெரினா அரபோவா முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் அவர் அப்பதவியில் செயல்பட்டு வருகிறார். இவர் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்துள்ளார். அதாவது அமெரிக்காவின் பொருட்களுக்கு எவ்வளவு வரியை ஒரு நாடு விதிக்கிறதோ அதற்கு ஏற்ப பிற நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதித்து வருகிறார்.
இது மொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவுக்கு 245 சதவீத வரியை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பில் அமெரிக்கா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நம் நாட்டுக்கு 26 சதவீத வரியை விதித்துள்ளது.
தற்போது அமெரிக்காவை எடுத்து கொண்டால் உலகின் பெரும் வல்லரசு நாடாக உள்ளது. இதன் அருகே பிற வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா கூட நெருங்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் பிற நாடுகளின் பொருட்களுக்கு வரி விதித்து தான் அமெரிக்கா பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது இல்லை. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளும் அமெரிக்க டாலரில் தான் வர்த்தகம் செய்கின்றன. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு என்பது தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதன்மூலம் மறைமுகமாக அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிற நாடுகள் உதவி செய்து வருகின்றன.
ஆனால் டொனால்ட் டிரம்பை அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டுள்ளார். எங்களுக்கு வரி விதிப்பது போல் உங்களுக்கும் வரி விதிப்பேன் என்று போட்டி போட்டு கடந்த 2ம் தேதி 100க்கும் அதிகமான நாடுகளுக்க கூடுதல் வரிகளை விதித்தார். தற்போது இந்த கூடுதல் வரி என்பது 90 நாட்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு பெரும்பாலான நாடுகளுக்கு இந்த கூடுதல் வரி என்பது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் செயல்பாட்டால் பல நாடுகள் அதிருப்தியடைந்துள்ளன.
இப்படியான சூழலில் தான் தற்போது இந்தியா, சீனா, ரஷ்யா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர பல நாடுகள் சேர ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை ரஷ்யாவின் எக்ஸ்பர்ட் ஒருவரும் உறுதி செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையில் பிரிக்ஸ் கூட்டமைப்பு வளர உள்ளதாக பெண் எக்ஸ்பர்ட் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்யாவின் எக்ஸ்பர்ட்டான எகடெரினா அரபோவா முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இவர் ரஷ்யாவின் எம்ஜிஐஎம்ஓ பல்கலைக்கழதக்தின் துணை டீனாக இருக்கிறார். இந்த பல்கலைக்கழகம் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொருளாதார நிபுணரான இவர் அந்த பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஸ்டடீஸ் தடைசார்ந்த கொள்கையின் எக்ஸ்பர்ட் மையத்தின் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எகடெரினா அரபோவா கூறியதாவது:
”அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல நாடுகளுக்கு வரி விதிப்புகளை மேற்கொண்டு வருகிறார். இது நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர தூண்டுகிறது. இதனால் அமெரிக்காவின் நடவடிக்கையை சமாளிக்க பல நாடுகள் மாற்று வழியை யோசிக்க தொடங்கி உள்ளன. இதற்கு அமெரிக்கா கட்டவிழ்ந்த நிலையில் செயல்பட்டு வருவது தான் காரணம்.
இப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் 10 நாடுகள் உள்ளன. இன்னும் பல நாடுகள் இணையலாம். குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவும் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் வாய்ப்புள்ளது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைக்குள் வர உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது வேகமாக வளர்ந்து வருகிறது” என்றார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பை எடுத்து கொண்டால் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் மட்டுமே இருந்தன. இப்போது கூடுதலாக 5 நாடுகள் இணைந்துள்ளன. எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர்ந்துள்ளன. இதனால் பிரிக்ஸ் நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இப்போது இந்த கூட்டமைப்பில் இன்னும் பல நாடுகள் சேர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் என்பது சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதில் பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வருவது பற்றி ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பிரிக்ஸ் கரன்சி வந்துவிட்டால் பலநாடுகள் அதனை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம். இதனால் அமெரிக்கா டாலரின் பயன்பாடு சரியும். மதிப்பும் உலகளவில் குறையும். இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை பிரிக்ஸ் கரன்சி உருவாகாவிட்டால் வர்த்தகம் செய்யும் இருநாடுகள் இடையே அதற்கான கரன்சி மூலம் வர்த்தகம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுவும் அமெரிக்காவுக்கு சிக்கலை தரும்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பல நாடுகள் இந்த செயல்முறையை செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. இது டொனால்ட் டிரம்புக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது..”பிரிக்ஸ் கரன்சியை யாரும் கொண்டு வரக்கூடாது. மீறி கொண்டு வந்தால் அமெரிக்கா உடனான உறவை மறந்துவிட வேண்டும்” என்று பகிரங்கமாக மிரட்டினார். ஆனால் டொனால்ட் டிரம்ப் இப்போது ஒவ்வொரு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்துள்ளார். இதனால் டிரம்புக்கு பாடம் புகட்ட பல நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17 வது உச்சி மாநாடு என்பது ஜுலை மாதம் 7 மற்றும் மொ தேதிகளில் பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரில் நடைபெற உள்ளது. அப்போது பிரிக்ஸ் கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் ரஷ்யாவின் எக்ஸ்பர்ட் அதனை உறுதி செய்யும் வகையில் பேசி உள்ளார். இது அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்துள்ளது.