அரசுக்கு தொழிலதிபர்கள் நெருக்கமாக இருப்பது இந்தியாவுக்கு புதிது அல்ல..!

டெல்லி: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்பானி- அதானி குறித்து பிரதமர் மோடி பேசியது பெரும் விவாத புள்ளியாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.

அம்பானி- அதானி குறித்த பேச்சுகள் நமது அரசியலில் புதிது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே அம்பானி- அதானிக்கு ஆதரவாக ஆளும் தரப்பு செயல்படுவதாகக் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

இந்தச் சூழலில் தான் தேர்தல் நேரத்தில் மீண்டும் அம்பானி- அதானி குறித்த பேச்சு வந்துள்ளது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த முறை இந்த பேச்சைப் பேசியவர் ராகுல் காந்தி இல்லை.. பிரதமர் மோடி.!

அம்பானி- அதானி காங்கிரஸுக்கு டெம்போக்களில் கறுப்புப் பணத்தை அனுப்பியதாக மோடி குற்றம் சாட்டினார். தெலுங்கானாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அம்பானி- அதானி குறித்து ராகுல் காந்தி பேசுவதில்லையே ஏன்.. கடந்த ஐந்து ஆண்டுகளாக, காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) ஒவ்வொரு நாளும் அவர்களை பற்றியே பேசி வந்தார்.

ரஃபேல் விவகாரம் அவருக்கு கை கொடுக்காத நிலையில், அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அம்பானி- அதானி மட்டுமே மோடி அரசின் கீழ் பயன் பெறுவதாகக் கூறி வந்தார். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானி பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் இந்தியத் தேர்தல்களில் தொழிலதிபர்கள் பெயர்கள் அடிபடுவது இது முதல்முறை இல்லை.. கடந்த 1970 மற்றும் 1980களில் டாடாக்கள் மற்றும் பிர்லாக்களின் பெயர்கள் தேர்தல் போது அதிகம் பயன்படுத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இப்போது எதிர்த்தரப்பில் இருக்கும் காங்கிரஸ் ஆளும் தரப்பு மீது கிட்டத்தட்ட அதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அன்று டாடா, பிர்லா போல இந்த முறை அதானி அம்பானி பெயர்கள் இடம்பெறுகிறது.. தாராளமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தங்கள், தொழில்துறை விரிவாக்கம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், இந்திய அரசியல்வாதிகள் இன்னும் தொழிலதிபர்களை குறிவைத்தே பேசி வருகிறார்கள்.

அதன் நீட்சியாகவே இந்த 2024 தேர்தல் பிரச்சாரத்தில் அம்பானி- அதானி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் மோடி இப்படிச் சொன்ன உடனேயே காங்கிரஸ் கட்சியும் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது கடந்த 2024 ஏப்ரல் 3 முதல் ராகுல் காந்தி தனது உரைகளில் அதானியை 103 முறையும், அம்பானியை 30 முறையும் குறிப்பிட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் உரையில் அடுத்த பகுதிதான் முக்கியமானது. அதாவது பிரதமர் மோடி, “இந்த தேர்தலில் அம்பானி மற்றும் அதானியிடம் இருந்து இளவரசர் எவ்வளவு பணம் பெற்றார் என்பதைக் கூற வேண்டும்.. எத்தனை மூட்டை கறுப்புப் பணத்தை அவர் பெற்றுள்ளார்? டெம்போக்களில் காங்கிரசுக்குப் பணம் வந்து சேர்ந்ததா? இரு தரப்பிற்கும் இடையே என்ன ஒப்பந்தம்? நாட்டு மக்களுக்கு இது குறித்து உண்மையை சொல்லுங்கள்” என்று கூறியிருந்தார்.

இதுதான் முக்கியமானது. பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முறை கூட இப்படி பேசியதில்லை. கடந்த 2019 தேர்தல் சமயத்தில் கூட மோடி இதுபோல பேசவில்லை. மோடி பேச்சில் இந்த குறிப்பிட்ட பகுதியைக் காங்கிரஸ் கையில் எடுத்தது. ராகுல் காந்தியே இந்த விவகாரம் குறித்து விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி, “முதல் முறையாக, நீங்கள் (மோடி) அதானி-அம்பானி குறித்துப் பேசியுள்ளீர்கள்.. அவர்கள் டெம்போக்களில் பணம் அனுப்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா… இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா? பேசாமல் நேரடியாக அவர்களிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை அனுப்பி விசாரணை செய்யுங்கள். இதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து விமர்சித்தனர். இரு தொழிலதிபர்கள் குறித்து பிரதமர் மோடி முக்கிய குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ப சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். சிபிஐ ராஜ்யசபா எம்பி பினோய் விஸ்வம், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரதமர் அலுவலகத்திற்கே கடிதம் எழுதியுள்ளார். இப்படி மோடியின் அந்த பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதேபோல கடந்த 1970 மற்றும் 1980களில் டாடாக்கள் மற்றும் பிர்லாக்களின் பெயர்கள் இடம் பெற்றன. மத்திய அரசு டாடாக்கள் மற்றும் பிர்லாக்களின் ஆதரவாகச் செயல்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது காலம் மாறி இருக்கிறது.. பெயர்கள் மாறியுள்ளன.. ஆனால், நமது நாட்டின் அரசியல் மாறவே இல்லை என்பதையே இது காட்டுகிறது.